விட்டில் பூச்சி


வெற்று வானமொன்றை
உற்றுப் பார்த்திருக்கும்
கண்களாய் கவிழ்ந்துகிடக்கும்
குப்பைத் தொட்டியருகில்
குலைக்கத் திராணியற்று
வெற்றுடம்பாய்க் கிடக்கும்
சொறிநாயின் சிந்தனைகள்
என்னவாகவிருக்க
முடியும்
என்று எனக்குள்ளே
கருவியபடி காத்திருத்தலின்
அவசியம் ஏதுமின்றி
பிணியிழந்த சடலமொன்று
கடந்து போன பாதைமீது
வைத்த விழி
வாங்காத வண்ணத்தப்
பூச்சியும், வருகை தராத
அரை டவுசர் மாணவனும்
கும்மியடிக்கக் கிளம்பிவிட
வெற்று வகுப்பரையில்
விட்டத்தை வெறித்துப் பார்த்தே
சிதறிப் போன கண்ணாடித்
துண்டுகளைச் சேகரிக்கும்
விட்டில் பூச்சியொன்று
என் கட்டிலருகே
விளக்கைத் தேடி!

-நாமக்கல் சிபி